Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எம்ஜிஆர் ஜோடியாக நடித்த நடிகை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பாங்காக்: எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த நடிகை மேட்டா ரூங்ராத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். எம்.ஜி.ஆர். நடிப்பில் கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக மஞ்சுளா, லதா, சந்திரகலா, மேட்டா ரூங்ராத் ஆகிய 4 நடிகைகள் நடித்து இருந்தனர். இவர்களில் மேட்டா ரூங்ராத் தாய்லாந்தை சேர்ந்தவர் ஆவார். படத்தின் கதைப்படி எம்.ஜி.ஆர். தாய்லாந்துக்கு செல்லும்போது அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த மேட்டா ரூங்ராத் பச்சைக் கிளி முத்துச்சரம் பாடலுக்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடனமாடி இருப்பார். இப்பாடலின் மூலமாக மேட்டா ரூங்ராத் அப்போது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்தார். மேலும் அவர் படத்தில் கொஞ்சும் தமிழில் பேசிய வசன உச்சரிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் மேட்டா ரூங்ராத் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 83 வயதாகும் அவர் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தனது வீட்டில் படுக்கை அறையில் நெற்றியில் குண்டு காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அவரது வேலைக்காரர் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பாங்காக் போலீசார் உடனடியாக விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்லாந்தில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்த அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அல்சைமர் எனும் மறதி நோயும் இருந்து வந்துள்ளது.