இலங்கையில் இறுதி யுத்தம் நடந்த 2008ம் ஆண்டில் கதை நடக்கிறது. போரில் தனது மனைவியைப் பறிகொடுத்த அமர் ராமச்சந்திரன், தமிழகத்தில் இருக்கும் தனது மனைவியின் உறவினரிடம் மகளை ஒப்படைத்துவிட்டு, நாட்டில் அமைதி திரும்பிய பிறகு மகளை தன்னுடன் அழைத்துக்கொள்ள முடிவு செய்கிறார். பிறகு நடப்பதே மீதி கதை.
நாட்டின் தலைமைகளால் ஏற்படும் யுத்தம் சாதாரண மனிதர்களின் வாழ்வாதாரத்தை எப்படி சிதறடிக்கிறது? இளம் பெண்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை அழுத்தமான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளால் இயக்குனர் அபிலாஷ் ஜி.தேவன் சிறப்பாக சொல்லியிருக்கிறார். அமர் ராமச்சந்திரன் அந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது மகளாக வரும் நேஹா அமரின் நடிப்பு கண்கலங்க வைக்கிறது.
அகதிகள் என்று பார்க்காமல் உதவி செய்யும் பெட்டிக்கடை பாலாசிங் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், மிரட்டலான பெரிய மனிதர், பள்ளி தலைமை ஆசிரியர், போலீஸ் அதிகாரி உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். எளிய கதையை வலிய காட்சிகளாக மாற்றி, திறம்பட ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரசாந்த் பிரணவம். அவுசேப்பச்சன் பின்னணி இசை, பிரமாதம். எடிட்டர் டீஜோ பி.வர்கீஸ் பணி குறிப்பிடத்தக்கது. காட்சிகள் ஆமை வேகத்தில் நகர்வது மட்டுமே சின்ன குறை.
