சென்னை: Anthony’s Atelier நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், பட நிகழ்வில் கதாநாயகி மதுமிதா தாஸ் பேசியதாவது: பொதுவாக அதிகம் பேசப்படாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் சவாலான மற்றும் சிறப்பான அனுபவமாக இருந்தது. டீசரில் அந்தக் கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணியும், அதற்கான எஸ்சென்ஸும் அழகாக வெளிப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
சிறப்பான பாடல் வரிகளை வழங்கிய கார்த்திக் நேத்தா சாருக்கும், இசையமைப்பாளர்கள் அசோக் ஸ்ரீதரன் மற்றும் ஜெய்கார் ஹரிநாத் அவர்களுக்கும் நன்றி. ஜீவா ரவி சார், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட படக்குழுவினரின் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் டி. ஆண்டனி பேசியதாவது: மதுமிதா இந்தப் படத்திற்காக 18 நாட்கள் வொர்க்ஷாப் செய்து, வேறு நகரம், வேறு மொழி என்றாலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஜீவா ரவி சார் எனக்கு தந்தை போன்ற ஆதரவை வழங்கினார்.
குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் சார் செய்த உதவியை மறக்க முடியாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை படம் வெளியாகுமா என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. விநியோகம் தொடர்பான பிரச்சனையை அவரிடம் சொன்னதும், உடனடியாக உதவி செய்து அதை சரி செய்தார். அவருடைய உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வே நடந்திருக்காது.
