இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான 'ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் படக்குழுவினர் உலக அளவில் படத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற அமெரிக்க யூடியூப் பிரபலம் மிஸ்டர் பீஸ்ட்டை (MrBeast) இந்த சிறப்பு நிகழ்வுக்கு அழைத்தனர்.
நிகழ்ச்சி மேடைக்கு வந்த மிஸ்டர் பீஸ்ட்டுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது ரசிகர்களுடன் உரையாடத் தொடங்கிய அவர், திடீரென "ஜெய் ஸ்ரீ ராம்" என முழங்கினார். இதைக் கேட்ட அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அருகில் இருந்த இயக்குநர் நிதேஷ் திவாரி, நடிகர் ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யஷ், தமிழ் நடிகை சாய் பல்லவி மற்றும் ரவி துபே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
