மும்பை: நடிகை சமந்தாவின் பெயரையும் புகைப்படங்களையும் அனுமதியின்றிப் பயன்படுத்தி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் முறைகேடான செயல்கள் அரங்கேறி வந்தன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உருவத்தைப் போன்ற ஆபாச டீப்ஃபேக் படங்கள், போலியான குரல் பதிவுகள் மற்றும் உருவத்தை இழிவுபடுத்தும் வகையிலான சாட்பாட்கள் உருவாக்கப்பட்டு விஷமிகளால் பரப்பப்பட்டு பெரும் பிரச்னை உருவானது.
இத்தகைய அத்துமீறிய செயல்கள் தனது நற்பெயருக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, தனது தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி சமந்தா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், சமந்தாவின் அடையாளத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் ஆபாச பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க உத்தரவிட்ட நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்தார்.
