சென்னை: திரைப்படத் துறையில் புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் பிலிம் டெவலப்மென்ட் நிறுவனம் மற்றும் ஆர்எம்கே இணைந்து நடத்தும் குறும்பட விருதுகள் 2026 விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விருது அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, சி.வி. குமார், இயக்குனர் பேரரசு, எழுத்தாளர் லியாகத் அலி கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது: கஸாலி எப்போது என்னை அணுகினாலும் திரையுலகின் நலனுக்காகவும், புதிய திறமையாளர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே பேசுவார். அதனால் அவரது எந்த முயற்சிக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
குறும்படங்களை உருவாக்கி அனுப்பியுள்ள இளம் படைப்பாளிகள் அனைவரும் நாளைய திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நல்ல கதைகளை உருவாக்கும் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். உங்களைப் பாதிக்கும் நல்ல கதை இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள், அதை திரைப்படமாக உருவாக்க என்னால் முடிந்த உதவியைச் செய்வேன். புதிய இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழிகாட்டுகிறது இந்த குறும்பட விருதுகள் முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.
