Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மூக்குத்தி அம்மன் 2 உருவாகிறது

சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதிலும் நயன்தாராவே நடிக்கிறார். மற்ற நடிகர்கள், படத்தின் இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நயன்தாரா நடிப்பில் அடுத்து ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டீயர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.