ஒருதலை காதலை சொல்லும் கிறிஸ்டினா கதிர்வேலன்: கவுசிக் ராம்
சென்னை: எஸ்.ஜே.என்.அலெக்ஸ் பாண்டியன் எழுதி இயக்கியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ என்ற படத்தில் கவுசிக் ராம், இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரதீபா, சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, ஜெயகுமார், அருள் டி.சங்கர், டிஎஸ்ஆர், சில்மிஷம் சிவா, ஜனனி நடித்துள்ளனர். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி தயாரித்துள்ளார். மிஸ்டர் டெல்டா கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
வரும் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பிரதீபா கூறுகையில், ‘கிறிஸ்டினா கேரக்டருக்காக என்னை தேர்வு செய்த இயக்குனருக்கு நன்றி. ‘நீர்ப்பறவை’ படத்தில் இருந்து நான் இசை அமைப்பாளர் ரகுநந்தனின் தீவிர ரசிகையாகி விட்டேன். கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகியுள்ளது. ‘பருத்திவீரன்’, ‘மைனா’ போன்ற படங்களை போல் ஒரு பாதிப்பை இப்படம் ஏற்படுத்தும்’ என்றார்.
கவுஷிக் ராம் கூறும்போது, ‘கும்பகோணத்தில் தங்கி, அங்குள்ள மக்களுடன் பேசிப் பழகி நடித்தேன். இது ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தனது காதலை சொல்ல எப்படி தவிக்கிறான் என்பது மட்டுமின்றி, சமூகத்துக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும் இயக்குனர் சொல்லியிருக்கிறார்’ என்றார்.
