அனைத்து துறைகளிலும் தனித்துவம் வாய்ந்த திறமைகள் கொண்ட 5 நண்பர்களுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்படுகிறது. அதை வாங்கச் செல்லும்போது, காட்டிலுள்ள ஆய்வகத்தின் உள்ளே சென்று, ஒரு தீவிர ஆராய்ச்சியை தங்களின் தவறால் திசை திருப்பிவிடுகின்றனர். அதன் விளைவாக, உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்கள், 10 நாட்களுக்கு உயிரின்றி கிடக்கின்றனர். அதன் பிறகு நடப்பதே முழு படம்.
படம் முழுவதும் ஒன் மேன் ஆர்மியாக மாறி, தனது தோளில் அல்ல, இதயத்தில் சுமந்திருக்கிறார் இயக்குனர், நடிகர் சங்ககிரி ராஜ்குமார். ஒரு படத்துக்கு தேவையான அனைத்து பொறுப்புகளையும் தனி நபராக வழிநடத்தி, உலகளவில் சாதனை படைத்திருக்கிறார். அதாவது அனைத்து டெக்னீஷியன் பணிகளையும் அவரே செய்திருக்கிறார். இது தமிழர்களுக்கும், தமிழ் திரையுலகிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கே பெருமை.
இறுதியில் ‘அன்பு ஒன்றே உலகை ஆளும்’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார். லாஜிக் பார்க்கவில்லை என்பதால், காட்சிகளைப் பற்றிய குறைகளை மன்னித்துவிடலாம். தொடர்ந்து 5 வருடங்களாக இப்படத்தை உருவாக்கியிருக்கும் அவரது நேர்மையான பணி, திரையில் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. ஆனால், எல்லா காலத்திலும் இப்படம் கொண்டாடப்பட வேண்டும். ஹாலிவுட் கலைஞர்களையே மிரள வைத்திருக்கும் தமிழர் சங்ககிரி ராஜ்குமாருக்கு பாராட்டுகள்.
