சென்னை: தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர்: கே. மோகன் குமார். துணைத் தலைவர்: எம். கணேஷ் குமார். துணைத் தலைவர்: ஏ. விஜய்குமார். செயலாளர்: எஸ். நந்தகோபால். பொருளாளர்: டி. குமார். மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டுக்கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, அதன் மூலம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் தொழிலை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த நடைமுறை அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தவொரு கூட்டு கூட்டத்திலும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பவும் முடிவானது.
