Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எங்கள் தங்கம் விமர்சனம்...

சமந்தாவின் பின்புலம் தெரியாத டாக்டர் திகந்த் மஞ்சாலே, அவரை காதல் திருமணம் செய்கிறார். இது திகந்த் மஞ்சாலேவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், தனது கணவரது தங்கையின் திருமணத்துக்காக கிராமத்துக்கு வரும் சமந்தா, அந்த வீட்டில் இன்னொரு மருமகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதை பார்த்து, அந்த இடத்தை பிடிக்க தனது தோழியின் உதவியை நாடுகிறார். நாளடைவில் மாமனார் ஆனந்த், மாமியார் கவுதமி உள்பட அனைவருக்கும் சமந்தாவை பிடிக்க ஆரம்பிக்கிறது.

அப்போது வீட்டுக்கு வரும் குல்ஷன் தேவய்யா, ‘எல்லா விஷயங்களையும் மறைத்து ஸ்வர்ணாவாக இருக்கும் நீ, ஜான்சியாக மாறி மீண்டும் என்னுடன் வரவேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கிறார். இல்லை என்றால், ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார். சமந்தா யார்? அவரால் குடும்பத்துக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியதா என்பது மீதி கதை.

முழு படத்தையும் தனது தோளில் தூக்கிச் சுமந்துள்ளார், சமந்தா. ரிஸ்க் எடுக்க தயங்காமல், ஆக்‌ஷன் காட்சிகளில் துணிச்சலாக நடித்துள்ளார். சூப்பர் ஹீரோக்களுக்கே சவால் விடும் அவரது ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ். ஆனால், கிளாமர் மட்டும் மிஸ்சிங். வில்லன் குல்ஷன் தேவய்யா ஒரேமாதிரி பேசி மிரட்டுகிறார். மற்றும் திகந்த் மஞ்சாலே, ஸ்ரீமுகி, மஞ்சுஷா, ஆனந்த், கவுதமி, சைதன்யா கிருஷ்ணா, ஸ்ரீலஷ்மி ஆகியோர் தங்கள் கேரக்டருக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம். பின்னணி இசையில் அசத்தியுள்ளார். எடிட்டிங், ஸ்டண்ட் காட்சிகள், அரங்க வடிவமைப்பு குறிப்பிடத்தக்கவை. பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். பெண்களின் சக்தியை சொல்ல எழுதப்பட்ட கதையில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் சதிவலையில் சிக்கும் பெண், எப்படி தன்னை காப்பாற்றி, மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் என்று, சமந்தாவுக்காகவே படத்தை உருவாக்கியுள்ளனர்.