Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

"என்ன உடை அணிந்தாலும் விமர்சனம் செய்கிறார்கள்" - திஷா பதானி வேதனை!

சமீபத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பாலிவுட் நடிகை திஷா பதானி அணிந்த உடை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆன்மிக விழாக்களிலும் இது போன்ற கவர்ச்சி உடைகள் தேவையா என்று எழுந்த கண்டனங்களுக்கு நடிகை திஷா பதானி தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளதுடன், கடுமையான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் திஷா பதானி, தமிழில் சூர்யா ஜோடியாக 'கங்குவா' படத்திலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், பொது இடங்களிலும் விழாக்களிலும் கவர்ச்சிகரமான உடைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

திஷா பதானியின் உடை குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் அளித்த பதில்: பிரபலங்கள் மீது விமர்சனங்கள் எழுவது இயல்புதான்; ஆனால், எனக்கு எதிராகவே ஒரு கூட்டம் செயல்படுவதாக உணர்கிறேன். நான் எந்த உடை அணிந்தாலும், யாருடன் பேசினாலும் அதற்கொரு காரணம் கற்பித்துத் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

ஆக்கபூர்வமான நல்ல விமர்சனங்களையும் அறிவுரைகளையும் ஏற்க நாங்கள் எப்போதுமே தயார். ஆனால், அறிவுரை என்ற பெயரில் விஷமத்தனமாகத் குறைகளை மட்டுமே தேடித் திரிபவர்களை நம்மால் மாற்ற முடியாது; அவர்களாகத் திருந்தினால் மட்டுமே உண்டு.

வலிகளை மனதுக்குள் புதைத்துக்கொண்டு இந்த விமர்சனங்களையும் வழக்கம்போலக் கடந்து செல்கிறேன். இதுபோன்ற தாக்குதல்களால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலையைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்