தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த புதிய படம் குறித்த ஹைப் தற்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தன் யதார்த்தமான படைப்புகளால் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 'SK 27' படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான படம் 'பார்க்கிங்'. திரையரங்குகளில் மட்டுமின்றி, ஓடிடி தளங்களிலும் வெளியாகி விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் இப்படம் தமிழின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் தட்டிச் சென்றது. மேலும், படத்தில் இரண்டாவது நாயகனைப் போல வாழ்ந்து காட்டிய மூத்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்று திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
'பார்க்கிங்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த தேசிய விருது குழுவினரையும் வியக்க வைத்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தற்போது சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
தேசிய விருது பெற்ற திறமையான இயக்குநரும், சிவகார்த்திகேயனும் முதன்முறையாக கைகோர்த்துள்ளதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் இப்போதே பலமடங்கு அதிகரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர், நடிகைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விருதை வென்ற ஒரு இயக்குநரும், கமர்ஷியல் ஹீரோவும் இணைவது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
