மாரிமுத்து, சர்மிளாவின் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில், திடீரென்று இளம் மகள் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடுகிறாள். இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன, மாயமான இளம் ஜோடி ஊர் திரும்பினார்களா என்பது மீதி கதை. நிஜத்தில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஆர்.அழகுமலை, படத்தை எழுதி இயக்கி தயாரித்து, ஊர் தலைவராக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். அவரது தம்பியாக வி.ஆர்.விநாயக், காதலியாக சர்மிஷா நடித்துள்ளனர். வழக்கமான பாணியில் நடித்துள்ள மன்சூர் அலிகான், மறைந்த மாரிமுத்து, வழக்கறிஞர் பேரரசு, அப்புக்குட்டி, சென்ராயன் ஆகியோரின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.
ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு, சிறுபட்ஜெட் படத்துக்கு ஏற்ப இருக்கிறது. படிக்கும் வயதில் காதல் எதற்கு என்று கேள்வி கேட்டு, எந்தவொரு விஷயமும் அந்தந்த வயதில் நடந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்ற கருத்தை இயக்குனர் ஆர்.அழகுமலை சொல்லியிருக்கிறார். சில இடங்களில் வரும் நாடக பாணி காட்சிகள் நெருடலாக இருக்கிறது.
