Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மோசமான படங்களை புறக்கணிக்க வேண்டும்: பார்வதி கருத்து

சென்னை: அஜித் பால் இயக்கத்தில் ‘ஸ்ட்ரோம்’ என்ற வெப்தொடரில் நடித்துள்ள பார்வதி, இதுகுறித்து தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகிறார். அவரிடம், `துரந்தர்’ போன்ற பிரச்னைக்குரிய படங்கள் திரைக்கு வருவது குறித்து கேட்டப்பட்டது. அதற்கு பார்வதி அளித்த பதில் வருமாறு: இங்கு மெயின்ஸ்ட்ரீம் திரைப் படங்களை விட, பிராந்திய மொழி படங்கள் தைரியமான பல கதைகளை சொல்கிறது.

மெயின்ஸ்ட்ரீம் படங்களை உருவாக்குபவர்கள், `எங்களால் தைரியமான கதைகளை சொல்ல முடியாது. ஏனெனில், இதில் அதிக பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது’ என்று சொல்கின்றனர். உங்களிடம் பணம் இருக்கிறது. நீங்கள்தான் தைரியமான விஷயங்களை சொல்வதற்கு முன்வர வேண்டும். அதை அதிக பண பலம் இல்லாத நாங்கள் செய்கிறோம். கணக்கே தலைகீழாக இருக்கிறது. உங்களுக்கு பேராசை இருப்பதால் நீங்கள் தைரியமாக இல்லை.

முதலாளித்துவ அமைப்புக்கு இரையாகிவிட்டீர்கள். உங்களுக்கு நிறைய பணம் வேண்டும். அதனால் கண்களை இறுக மூடிக்கொண்டு, மக்களை பாதிக்கும் பிரச்னைக்குரிய படங்களை உருவாக்குகிறீர்கள். இதுபோன்ற படங்களுக்கு அதிகமான பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அவற்றை நாம் பார்க்க மறுக்கிறோம். எளிமையாக கண்களை மூடிக்கொண்டு கடக்கிறோம். இங்கு சாதியம், வாழ்க்கை முறையாக இன்னும் இருக்கிறது.

எனவே, அதற்கான பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்பதற்கு மட்டும் நாம் ஏன் அதிர்ச்சி அடைகிறோம்? இந்திய கலாச்சாரம் சிறந்தது என்று சொல்லும் வேளையில், இதுவும் அதன் பாகம்தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். பார்வை யாளர்களும் அதிக துணிச்சலுடன் இருக்க வேண்டும். `இதுபோன்ற மோசமான படங்களை நாங்கள் பார்க்க மாட்டோம்’ என்று உறுதியாக சொல்ல வேண்டும்.

அவர்களிடம் இருக்கும் வல்லமை, இத்தகைய படங்களுக்கு செலவழிப்பதை தவிர்ப்பது. அதை தாண்டிய விஷயங்களை தயாரிப்பாளர்கள்தான் செய்ய வேண்டும். பிரச்னைக்குரிய படங்களில் இருந்து சம்பாதிக்கும் பணத்தின் மூலமாவது நல்ல படங்களை ஆதரிக்கலாம். இதன்மூலம் உங்கள் ஆன்மாவின் ஒரு பகுதியையாவது நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.