Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெத்தி விமர்சனம்

ஆந்திராவின் விஜயநகரம் பகுதியில் பெயரே இல்லாத மலைக்கிராமத்தில், தங்களை பற்றிய எந்த அடையாளமும் இல்லாமல் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களுக்கான அங்கீகாரத்துக்காக இந்திய அரசிடம் போராடுகின்றனர். அவர்களை சேர்ந்த ராம் சரண், முதலில் கிரிக்கெட், பிறகு குஸ்தி, இறுதியில் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கிறார். ஆனால், கடைசியில் அவர் தங்கப்பதக்கத்தை வாங்க மறுக்கிறார். அதன் பின்னணி என்ன? கிராம மக்கள் காத்திருந்த ரயில் நின்றதா? அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்ததா என்பது மீதி கதை.

கடுமையான உழைப்பை வெளிப்படுத்திய ராம் சரண், தேசிய விருதுக்கான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். விளையாட்டுகளில் வெளிப்படுத்தும் அவரது ஆற்றல், கிளைமாக்சில் இதயத்தை உருக வைக்கிறது. ஹீரோயின் ஜான்வி கபூரை வீணடித்துள்ளனர். குஸ்தி வாத்தியாருக்கான பாடிலாங்குவேஜை அற்புதமாக வெளிப்படுத்திய சிவராஜ்குமாரின் உத்வேக பேச்சு, படத்தின் அடிநாதமாக இருக்கிறது. ெஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, போமன் இரானி ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசை, கேள்வி கேட்க வைக்கிறது. கிரிக்கெட், குஸ்தி, ஓட்டப்பந்தயம் ஆகிய விளையாட்டுகளை ஒளிப்பதிவாளர் ஆர்.ரத்னவேலு கண்முன் காட்டி பிரமிப்பு ஏற்படுத்துகிறார். நவீன் நூலி எடிட்டிங், அவினாஷ் கொல்லா அரங்க வடிவமைப்பு குறிப்பிடத்தக்கவை. சாதாரண மனிதனுக்கு சமூக அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதை சொன்ன இயக்குனர் புச்சி பாபு சனா, படத்தின் நீளத்தை குறைத்திருக்க வேண்டும்.