Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரகாஷ் ராஜ் நடிப்பில் "ஃபாதர்" டீசர் வெளியீடு!

இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமான உறவு மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். டார்லிங் கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியாகியுள்ள டீசரில் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், தந்தை – மகன் உறவை மையப்படுத்திய உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பிரகாஷ் ராஜின் நடிப்பு மற்றும் அவரது கதாபாத்திரத்தின் உணர்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா இடையேயான திரை உறவு குறித்தும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தந்தையின் அன்பு, பொறுப்பு, கண்டிப்பு, தியாகம் ஆகியவற்றை ஒரு மகன் எவ்வாறு புரிந்துகொள்கிறான் என்பதையும், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் இப்படம் பேசுகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் ஆர். சந்துரு கூறுகையில், ‘ஃபாதர்’ ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்தக்கூடிய உணர்வுகளைக் கொண்ட திரைப்படம் என்றும், டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் விநியோக உரிமையை Macis Productions கைப்பற்றியுள்ளது. ஆர். சந்துருவின் தயாரிப்பு, ராஜ்மோகனின் இயக்கம், டார்லிங் கிருஷ்ணாவின் நடிப்பு மற்றும் பிரகாஷ் ராஜின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.