கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென் கே.கபூர், மமிதா பைஜு நடிப்பில் மலையாளத்தில் உருவாகி, கடந்த 2024ல் திரைக்கு வந்த படம் `பிரேமலு’. இது ஹிட்டாகி வசூலிலும் சாதனை படைத்தது. கேரளாவில் மட்டுமின்றி, நேரடி மலையாள படமாக தமிழ்நாடு, ஆந்திரா உள்பட மற்ற மாநிலங்களிலும் மிகப்பெரிய ஹிட்டானது. தெலுங்கிலும், தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, இதன் 2ம் பாகம் உருவாகிறது என்று அறிவித்தனர். தற்போது கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ள `பெத்லஹேம் குடும்ப யூனிட்’ என்ற மலையாள படம், வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்த படமாக `பிரேமலு 2’ இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருந்து வந்த ‘பிரேமலு’ படம் திடீரென்று நீக்கப்பட்டுள்ளது. தற்போது ‘பிரேமலு’ தெலுங்கு பதிப்பு மட்டும் ஆஹா ஓடிடி தளத்தில் இருக்கிறது. காரணம், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதுதான் என்று கூறப்படுகிறது. ‘பிரேம் கீதானு’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில், வீர் பஹாரியா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே அக்ஷய் குமார் நடித்த ‘ஸ்கை போர்ஸ்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர், மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனாவார்.
பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவின் சகோதரி அஃபீதா நாடியாவாலாவின் மகள் அஃபியா சையத் ஹீரோயினாக நடிக்கிறார். அபூர்வ் சிங் கார்க்கி இயக்குகிறார். வரும் அக்டோபர் 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
