அமராவதி: ஆந்திரப் பிரதேச ஆசிரியர் கூட்டமைப்பு ‘இருமுடி’ (தமிழில் ‘இருமுடி கட்டு’) தெலுங்கு திரைப்படத்திற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள சில குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று அதன் தலைவர்கள் சென்னுபதி மஞ்சுளா மற்றும் பசவலிங்கராவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அக்காட்சிகள் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் மிகவும் தவறான முறையில் சித்தரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கல்வி நிறுவனங்களைக் காட்சிப்படுத்தும்போது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குச் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகை சுவாசிகா ஏற்று நடித்துள்ள பெண் ஆசிரியர் கதாபாத்திரம், மிகவும் எதிர்மறையாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணி, அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு உண்மையான அரசுப் பள்ளியைப் போலவே அமைந்துள்ளது.
மேலும், அக்காட்சியில் வரும் மாணவர்கள் மாநில அரசின் அதிகாரப்பூர்வப் பள்ளிச் சீருடையை அணிந்துள்ளனர் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த சர்ச்சை குறித்து படக்குழுவினர் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி, படத்தில் வரும் பள்ளியின் பெயரையும் அதன் இருப்பிடத்தையும் அவர்கள் மறைக்க வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.
