மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப் படத்தை பிரியங்கா சோப்ரா வெளியிட்டார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீதேவி, கடந்த 1963 ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார். தனது 4வது வயதில் ‘கந்தன் கருணை’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு ஹீரோயினாக புகழ்பெற்றார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். 2017ல் வெளியான ‘மாம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். 2013ல் ஒன்றிய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தமிழில் அவர் கடைசியாக நடித்த படம், ‘புலி’.
கடந்த 2018 பிப்ரவரி 24ம் தேதி துபாய் ஓட்டலில், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், தீரஜ் யு.குமார் எழுதிய ‘எம்ப்ரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராபி ஆஃப் ஸ்ரீதேவி’ என்ற புத்தகம் தயாராகியுள்ளது. ஸ்ரீதேவியின் குழந்தை பருவம் முதல், இந்தியாவின் முதல் பான் இந்தியா நடிகையாக மாறிய வாழ்க்கை வரை, அவரது 50 ஆண்டு கால திரையுலக பயணம் குறித்து எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் அட்டைப் படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, ‘ஒரே ஒருவர் மட்டுமே. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் ஸ்ரீதேவி மேடம்.
‘எம்ப்ரஸ்: தி டெபனிட்டிவ் பயோகிராபி ஆஃப் ஸ்ரீதேவி’ புத்தகம் விரைவில் வருகிறது’ என்று தெரிவித்துள்ளார். இப்புத்தகத்தில் அமிதாப் பச்சன், ஜாவேத் அக்தர் ஆகியோரை பற்றிய சிறப்பான தகவல்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட அரிய போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
