தியேட்டர் அதிபர்களின் 8 வார கணக்கும்; ஓடிடி நிறுவனங்களின் 4 வார நிர்பந்தமும்: சிக்கலில் தயாரிப்பாளர்கள்
சென்னை: தமிழ் திரையுலகில் தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஓடிடி வெளியீட்டு கால அவகாசம் குறித்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு படம் தியேட்டரில் வெளியான 4 வாரங்களிலேயே (28 நாட்கள்) ஓடிடிக்கு வந்துவிடும் என்பதால், மக்கள் தியேட்டருக்கு வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால் திரையரங்குகளுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. பாலிவுட்டில் பின்பற்றப்படுவதைப் போல, தமிழ்ப் படங்களும் தியேட்டரில் வெளியாகி குறைந்தது 8 வாரங்கள் (56 நாட்கள்) கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் எனத் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
8 வாரக் கெடுவுக்குச் சம்மதிக்கும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிடுவோம் என்றும், புதிய படங்களுக்கு முன்பணம் தரமாட்டோம் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் புதிய விதியைக் கொண்டுவந்தது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி லிவ் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள், தியேட்டரில் படம் வெளியான 4 வாரங்களில் தங்களுக்குக் கொடுத்தால் மட்டுமே முழுத் தொகையையும் தருவோம் என்கின்றன. ஒரு தயாரிப்பாளர் 8 வாரங்கள் கழித்து ஓடிடிக்குத் தருவதாக ஒப்புக்கொண்டால், ஓடிடி நிறுவனங்கள் படத்திற்கான பிசினஸ் தொகையை பெருமளவு குறைத்துவிடுகின்றன. தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு வெளியாகும் 250-க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலானவை தியேட்டர் வசூலில் நஷ்டத்தைச் சந்திக்கின்றன.
ஓடிடி பிசினஸ் மூலம் மட்டுமே தயாரிப்பாளர்கள் ஓரளவுக்குத் தப்பிப் பிழைக்கின்றனர். தியேட்டர்காரர்களின் இந்த ஒருதலைப்பட்சமான 8 வார விதிமுறையால் தங்களுக்கு மேலும் 700 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்கிறது. தியேட்டர் அதிபர்களின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஒரு அதிரடி முடிவை எடுத்தன. செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் தியேட்டர்களில் வெளியாகாது; படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளும் முழுமையாக நிறுத்தப்படும் எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் தொடக்கத்தில் வெளியாகவிருந்த கார்த்தியின் ‘சர்தார் 2’, அருள்நிதியின் ‘டிமாண்ட்டி காலனி 3’ போன்ற பல முக்கியப் படங்களின் வெளியீடு மற்றும் தயாரிப்புப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில், தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தற்போதைக்கு நடைமுறையில் உள்ள பழைய விதிகளின்படியே (4 வாரம் அல்லது ஒப்பந்தப்படி) படங்களை ரிலீஸ் செய்யும்படி தியேட்டர் உரிமையாளர்களுக்கு அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு வேலை நிறுத்த போராட்டம் விலக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பிரச்னை தீர்க்க தியேட்டர் அதிபர்கள், ஓடிடி நிறுவனங்கள் இடையே சுமூகம் ஏற்பட வேண்டியதும் அவசியம் என சினிமா ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
பைரசிக்கு வழிவகுக்கும்
சினிமா துறையில் பைரசி பிரச்னை பல காலமாக இருக்கிறது. புதிய படத்தை ஓடிடிக்கு தர, 8 வாரங்கள் வரை காத்திருந்தால் அதற்குள் அந்த படத்தின் டுப்ளிகேட் காப்பி வெளியாகிவிடுகிறது. பைரசியில் மக்கள் அதை பார்த்துவிடுகிறார்கள். மேலும் படம் வெளியானதுமே, மறுநாளில் தியேட்டர் பிரின்ட்டில் படம் இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. இதற்கெல்லாம் தியேட்டர்களில் திருட்டுத் தனமாக படத்தை வீடியோ எடுப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. அப்படி பைரசியில் படத்தை பெரும்பாலனவர்கள் பார்த்துவிட்டால் ஓடிடியில் பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் ஓடிடி நிறுவனங்கள் முன் வைக்கின்றன.
