Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆண்டுதோறும் காணாமல்போகும் 150 தயாரிப்பாளர்கள்: கே.ராஜன் பேச்சு

சென்னை: சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாயகன் பிரஜின், நாயகி ஷானா, கே. பாக்யராஜ், போஸ் வெங்கட், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். கே. ராஜன் பேசும்போது, ‘தமிழில் ஆண்டுக்கு 200 படங்கள் வந்தாலும் 150 தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் நிலைமை. இதற்கு யார் காரணம்? ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநரை விட, நடிகர்களை விட தயாரிப்பாளர்தான் முக்கியம். எந்த ஒரு நடிகர் தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த நடிகர் வெற்றி பெறுவார். படமும் வெற்றி பெறும்’ என்றார்.

தயாரிப்பாளர் ராஜன் ஜோசப் தாமஸ் பேசும்போது, ‘கேரளாவில் இருந்து இங்கே வந்து சினிமாவில் நுழைய வேண்டும் என்று பல நாட்கள் அலைந்தேன். ஒரு துணை நடிகராகக் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு நன்றாகப் படித்து அமெரிக்கா சென்றேன். அங்கே தபால் துறையில் 28ஆண்டுகள் வேலை பார்த்தேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டு அதே சினிமா ஆர்வத்துடன் தயாரிப்பாளராக வந்திருக்கிறேன்’ என்றார். ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை ஜெனிஷ் வெளியிடுகிறார்.