மலையாள படவுலகை சேர்ந்த ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் படம் ‘சீன்’. இந்தாண்டு தீபாவளி சிறப்பாக வரும் நவம்பர் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. நகைச்சுவை கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் ‘ஆத்தி இவ யார்ரா’, ‘ஏரோபிளேன்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக ‘சீன்’ படத்தின் டீசர் வெளியானது. அதன்மூலம் இன்பராஜ் என்ற போலீஸ் அதிகாரியாக சூர்யாவும், மாயா என்ற கேரக்டரில் நஸ்ரியாவும் நடிப்பது தெரியவந்தது.
தற்போது நஸ்லென் நடிக்கும் வேடத்தை அறிமுகப்படுத்தி முதல் தோற்றத்தையும், அறிமுக வீடியோவையும் படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இதனை சூர்யா தனது சோஷியல் மீடியாவில் பகிந்துள்ளார். அதில், ‘சில அறிமுகங்கள் மிகவும் சிறப்பானவை. அளவற்ற திறமை கொண்ட நஸ்லெனை ‘சீன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். ஈஸ்வரனை அறிமுகப்படுத்துகிறோம். தமிழ் சினிமாவுக்கு மனமார வரவேற்கிறோம்’ என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார். 45 நொடிகள் ஓடக்கூடிய அந்த அறிமுக வீடியோவில், ஈஸ்வரனாக வரும் நஸ்லென் ஒரு சைக்கோ கொலைகாரனாகவும், தான் செய்த கொலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்பவராகவும் காட்டப்படுகிறார். காவல் அதிகாரியான சூர்யா ஈஸ்வரனை பற்றி சொல்லும்போது, ‘நாம ஒரு முகம் இல்லாத, உணர்ச்சிகள் இல்லாத, மனித தன்மையற்ற கொடூரனை தேடுகிறோம்’ என்று கூறுகிறார். இந்த அறிமுக வீடியோ கவனம் பெற்றுள்ளது.
