Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

50 மொழிகளில் வாரணாசி டப்பிங்; 1500 கலைஞர்களிடம் குரல் தேர்வு நடத்தும் ராஜமவுலி

ஐதராபாத்: ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களைத் தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலகெங்கிலும் உள்ள 120-க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 50 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற இந்திய மொழிகள் மட்டுமின்றி பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், ஜப்பனீஸ், கொரியன் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்படுகிறது. தற்போதுள்ள சினிமா சூழலில் பல முன்னணித் திரைப்படங்கள் (உதாரணமாக நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’) ஒரே நேரத்தில் பல மொழிகளில் டப் செய்ய ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால், இயக்குனர் ராஜமவுலி தனது படத்தில் ஏஐ டப்பிங் முறையை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

தொழில்நுட்பத்தை விட மனிதர்களின் நிஜமான குரல்களே உணர்வுகளை மிகச் சரியாகக் கடத்த முடியும் என்று அவர் நம்புகிறார். திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், ஆக்ரோஷம் மற்றும் ஆன்மா எந்த மொழியிலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் ராஜமவுலி உறுதியாக உள்ளார். இதற்காக, 50 மொழிகளிலும் உள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான குரல்களைத் தேர்வு செய்ய, அவரது குழு 1,500-க்கும் மேற்பட்ட டப்பிங் கலைஞர்களின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்து, தகுதிப் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் முதன்மைக் கதாபாத்திரங்களுக்குப் பேசும் குரல்கள், அந்தந்த மொழிகளில் மிகவும் கச்சிதமாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.