அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ என்ற படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் டாக்டர் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, முக்கிய வேடங்களில் சிம்ரன், ராசி கன்னா, ராம் பொதினேனி நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து முடிந்தது. இதையடுத்து படக்குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இந்நிலையில், தனது சோஷியல் மீடியாவில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ராசி கன்னா, ‘ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.
தற்போது அவர் எனது நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். தொடர்ந்து நான் நிறைய கேள்விகள் கேட்டாலும், புன்னகை மாறாமல் பொறுமையுடன் பதிலளிக்கிறார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவ்வப்போது என்னை கேலி செய்வார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலமாக, பல்வேறு விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.
