திருமணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் அமையாத நிலையில் சோகத்தில் தவிக்கும் ரியோ ராஜ், திடீரென்று ரயிலில் சந்தித்த வர்த்திகா ஜெயினை காதலிக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் தன்னை பார்க்கக் கூடாது, பேசக்கூடாது என வர்த்திகா கண்டிஷன் போடுகிறார். அது ஏன் என்பதே கதை. இன்றைய காலக்கட்டத்தில் மிடில் கிளாஸ் இளைஞர்கள், தங்களுக்கான துணையை தேடி திருமணம் செய்துகொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை முழுநீள காமெடி படமாக எழுதி இயக்கியுள்ளார், ராமச்சந்திரன் கண்ணன்.
ரியோ ராஜுக்கு பொருத்தமான கேரக்டர் என்பதால், கடைசிவரை தனது ஜாலியான நடிப்பின் மூலம் படம் தொய்வடையாமல் பார்த்துக்கொள்கிறார். அவரது ஜோடியாக வர்த்திகா ஜெயின் அறிமுகமாகியுள்ளார். கேரக்டருக்கேற்ற தேர்வு என்றாலும், இன்னும் கூட அவரிடம் இருந்து நடிப்பை வரவழைத்து இருக்கலாம். முனீஷ்காந்த், மா.கா.பா.ஆனந்த், காத்தாடி ராமமூர்த்தி, சுவாமிநாதன், சுதன்குமார், தீபா வெங்கட், சேத்தன், மாளவிகா அவினாஷ், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஜிடி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜூன் தனது பணியால் கவர்கிறார். அங்கித் மேனன் பின்னணி இசையும், ஒய்.என்.சி.சிவா எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கவை. சமீபத்தில் வெளியான ‘டபுள் ஆக்குபன்சி’ என்ற படத்தின் கதையை ஞாபகப்படுத்தினாலும், இப்படத்தில் கையாளப்படும் யுக்தி புதிது. ‘ராம் அண்ட் லீலா’ படம் ஜென்-ஸீ ரசிகர்களை கவரும்.
