2K லவ் ஸ்டோரி ஹீரோவை அறிமுகப்படுத்திய ராமராஜன்
சென்னை: சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிக்க, சுசீந்திரன் எழுதி இயக்கியுள்ள படம், ‘2K லவ் ஸ்டோரி’. இதில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜெகவீர் என்ற கிரிக்கெட் வீரரை ராமராஜன் அறிமுகப்படுத்தி பேசும்போது, ‘காதல் என்பது மனதைவிட்டு அகலாத ஒன்று. இன்று எல்லோரும் எதிர்பார்க்கும் 2கே கிட்ஸ் கதை இது. அவர்களின் காதலை அருமையாகச் சொல்லக்கூடிய சுசீந்திரன், இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றிபெறுவார்’ என்றார். பிறகு சுசீந்திரன் பேசுகையில், ‘கடந்த 10 வருடங்களாக நான் பெரிய ஹிட் படம் கொடுக்கவில்லை. அதனால், ரொம்ப ஆழமாக யோசித்து இக்கதையை உருவாக்கினேன்.
இது, என்னை நானே மீட்டெடுக்கும் படம். இதில், ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தைப் போல் நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் நடந்தது. இயற்கையும் எங்களுக்காக மனமிரங்கி பல உதவிகள் செய்தது. நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இசை அமைப்பாளர் இமானும், நானும் இணைந்துள்ள 10வது படம் இது’ என்றார். மீனாட்சி கோவிந்தராஜன், ஜெயப்பிரகாஷ், வினோதினி வைத்தியநாதன், ஜி.பி.முத்து, துஷ்யந்த், முருகானந்தம், ஆண்டனி பாக்யராஜ், ஆடை வடிவமைப்பாளர் மீரா, ஒளிப்பதிவாளர் வி.எஸ்.ஆனந்தகிருஷ்ணன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடன இயக்குனர் ஷோபி பால்ராஜ் கலந்துகொண்டனர்.
