மும்பை: ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படம், பல மொழிகளில் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ராம்லீலா மகா சங்கம் என்ற அமைப்பு, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், ‘‘இப்படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான காட்சிகள் அல்லது வசனங்கள் ஏதேனும் இடம் பெற்றிருந்தால், அவற்றை பொதுமக்கள் பார்ப்பதற்கு முன்பே, அதாவது படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே கண்டறிந்து நீக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்.
அதனால் படம் வெளியாவதற்கு முன் எங்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும். மேலும், எங்களது இந்தக் கோரிக்கையைத் தயாரிப்பு தரப்பு ஏற்க மறுத்தால், டெல்லி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள திரையரங்குகளுக்கு முன்பாக மிகக் கடுமையான போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவோம்’’ என்று ராம்லீலா மகா சங்கம் அந்த கடிதத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ‘ராமாயணா’ படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
