மும்பை: பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் (35), கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல நகைக்கடைக்காக ரக்ஷா பந்தன் பண்டிகை விளம்பரத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து நடித்திருந்தார். இதற்கு பாஜ எம்பியான நடிகை கங்கனா ரனவத் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை கொடூர கும்பல் தாக்கி மானபங்கம் செய்தது. இந்த சூழலில் நடிகை கீர்த்தி சனோன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த சம்பவம் ஆண்களுக்கும் பெண்களுக்குமான போர் அல்ல;
ஆணாதிக்க வெறிபிடித்த ஆண்கள் மற்றும் ஆணாதிக்கமே கலாசாரம் என நம்பும் மூளைச்சலவை செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான போராட்டம்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘பண்டிகை விளம்பரத்தில் ஒரு நடிகை கவர்ச்சியாக தோன்றுவதற்கு காட்டும் கோபத்தை, நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை மரணங்களுக்கு மக்கள் காட்டுவதில்லை. இதை பார்க்கும் போது நமது சமூகம் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது’ என்ற கருத்தையும் அவர் ஆமோதித்துள்ளார்.
