உரிய அங்கீகாரம் கிடைக்காததால் தெருக்கூத்தில் ஈடுபடுவேன்: ஒன் மேன் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் வேதனை
சங்ககிரி: திரைப்படம் உருவாக்க தேவையான 72 துறைகளையும் ஒரே நபராக கையாண்டு, 6 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து, ‘ஒன்மேன்’ என்ற தமிழ் படத்தை உருவாக்கிய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், தனது படைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிக வேதனை அடைந்துள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ராஜ்குமார், இதற்கு முன்பு ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற படங்களை எழுதி இயக்கி நடித்தார். அவர் அளித்த பேட்டி வருமாறு:
ஒரு தனி மனிதனால் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், தமிழ்நாட்டு மண்ணில் இருந்து உலக சினிமாவுக்கு வித்தியாசமான படைப்பை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலும் ‘ஒன் மேன்’ என்ற படத்தை உருவாக்கினேன். தமிழகத்தில் வழக்கமான கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போன்ற அம்சங்கள் இல்லாமல் படத்தை உருவாக்கினால், ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்.
பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலையில், மக்களுக்காக உருவாக்கிய படத்தை மக்களிடமே நேரடியாக கொண்டு செல்லும் வகையில், வரும் வியாழக்கிழமை யூடியூப்பில் வெளியிடுகிறேன். மேலும், வித்தியாசமான படைப்புகளை உலக சினிமாவுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசும், திரைப்பட வளர்ச்சி துறையினரும் ஊக்கமளிக்க வேண்டும். திரைத்துறையில் ஏற்பட்ட போராட்டம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக, தற்போது நான் எனது தந்தைக்கு உதவியாக மரங்களை பராமரித்து வருகிறேன்.
சினிமாவில் கடுமையான உழைப்புக்கு பிரதிபலன் கிடைக்காதபோது வயற்காட்டில் பணியாற்றலாம், தெருக்கூத்து நடத்தலாம் என்ற மனநிலை ஏற்படுகிறது. தெருக்கூத்தில் நாம்தான் ராஜா, நாம்தான் மந்திரி. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாகவும், கம்பீரமாகவும் வாழலாம். எனினும், புதிய சிந்தனைகளுடன் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவோம். வணிக படங்களும், முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களும் மட்டுமே திரைப்படங்கள் அல்ல. புதிய சிந்தனைகளுக்கு உரிய இடம் கிடைத்தால்தான் தமிழ் சினிமா உலக அரங்கில் பேசப்படும்.
