Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரெட் லேபில் விமர்சனம்...

எம்எல்ஏ மகள் அஸ்மினுக்கும், லெனினுக்கும் காதல் மலர்கிறது. ஆனால், தனது மகளை முறைமாமனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடும் எம்எல்ஏ., லெனினை தீர்த்துக்கட்ட போலீசுக்கு ஐடியா கொடுக்கிறார். அப்போது கல்லூரி வளாகத்தில் முறைமாமன் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளி யார்? ஏன் கொலை நடந்தது? லெனின், அஸ்மின் திருமணம் நடந்ததா என்பது மீதி கதை.

காலேஜ் மர்டர் மிஸ்ட்ரி கதையை நேர்த்தியாக இயக்கியுள்ளார், கே.ஆர்.வினோத். கைரேகை மாறும் மற்றும் மாற்றப்படும் காட்சிகள் நல்ல யுக்தி. தயாரிப்பாளர் லெனின் ஹீரோவாக அறிமுகமாகி, முழு படத்தையும் தோளில் சுமந்து இயல்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் எதிரிகளை நன்றாக அடித்திருக்கிறார். ஹீரோயின் அஸ்மின் அழகாக இருக்கிறார். காதலனுக்காக தியாகம் செய்து மனதில் பதிகிறார்.

ஆர்.வி.உதயகுமார் வில்லனாக மாறி மிரட்டியுள்ளார். மற்றும் அனுமோகன், தருண், கெவின், கார்மேகம், சசி, அனுஷா ஆகியோர், இயக்குனர் சொன்னதை மட்டும் செய்திருக்கின்றனர். கல்லூரி தேர்தல், எம்எல்ஏ மகனின் மிரட்டல், திடீர் கொலை, காதல் தியாகம், ஃபேமிலி சென்டிமெண்ட் என்று, கதம்பம் போல் இருக்கிறது படம். கொடூரமான கொலைக்கு பிறகு கதையின் திசை மாறுகிறது.

கொலையை மறைக்க லெனின் தீட்டும் திட்டங்கள் எதிர்பாராதது. சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவும், கைலாஷ் மேனன் இசையும் படத்தை காப்பாற்றி இருக்கிறது. இன்னமும் காவல்துறை அரசியல்வாதிகளின் ஏவல்துறையாக இருப்பதை எத்தனை படத்தில் காட்டுவார்களோ தெரியவில்லை.