Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனங்களை ஏற்று என்னை மாற்றிக்கொள்கிறேன்: கென் கருணாஸ்

சென்னை: பார்வதா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கருப்பையா சி.ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்த படம், ‘யூத்’. அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, நளினி நடித்திருந்தனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். இப்படம் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில், படக்குழு சார்பில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கென் கருணாஸ் பேசியதாவது: ஹீரோவாக என்னை நிலைநிறுத்துங்கள் என்றுதான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால், படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்றால், மக்கள் என்னை பார்த்ததும் உற்சாகமாக கத்துகிறார்கள். அவர்களின் சந்தோஷத்தை பார்த்து நம்ப முடியவில்லை. இதற்காகத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். நான் ஆசைப்பட்ட விஷயம் இப்போது நடக்கிறது.

என் தந்தை கருணாஸ் அடிக்கடி சொல்வார். ‘நாம் ரொம்ப நாளாக ஆசைப்பட்ட விஷயம் நடக்கும்போது, அது நம்மால் நம்புகிற மாதிரி இருக்காது’ என்று. ஆசையை நிறைவேற்றிய தயாரிப்பாளருக்கு நன்றி. என் அப்பா, அம்மாவை பெருமைப்படுத்தவே ‘யூத்’ படத்தை உருவாக்கினேன். இப்போது அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் நினைத்ததை தாண்டி படம் அமோகமாக வசூல் செய்துள்ளது. எல்லா விமர்சனங்களையும் பார்த்தேன், படித்தேன். அந்த விமர்சனங்களில் குறிப்பிட்டதை வைத்து, அடுத்தடுத்த படங்களில் எனது குறைகளை திருத்திக்கொள்கிறேன். என் வாழ்க்கையை ‘யூத்’ படம் மாற்றிவிட்டது. அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை.