திடீரென்று அரசாங்கம் மது விற்பனையை தடை செய்கிறது. இதனால், ஹீரோ ஏ.ஹரிஷ் மட்டுமின்றி, அவரது நண்பர்கள் இணைந்து நடத்தும் மதுப்பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கத்தை சேர்ந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தொடர்்து போராடும் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்பது மீதி கதை.
அம்மா மற்றும் தங்கை எதிரிலேயே குடித்துவிட்டு அலப்பறை செய்யும் ஏ,ஹரிஷ், பிறகு காதலியிடம் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு, மறுபடியும் குடிப்பதில் அரை சதம் அடித்துள்ளார். குடிப்பழக்கத்தை கைவிட வைக்கும் தந்திரக்காரி தனலட்சுமியின் நடிப்பு யதார்த்தம். ஹீரோவின் நண்பனாக கல்கி ராஜா, மனைவி இறந்ததுகூட தெரியாமல் தொடர்ந்து குடிக்கும் நபர் மற்றும் ரமா, கிருத்திகா, பிரியதர்ஷினி, நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர், கேரக்டருக்கேற்ப பொருத்தமாக நடித்துள்ளனர்.
ராஜபாளையத்தின் அழகை ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரிஸ் இயல்பாக காட்டியுள்ளார். சகிஷ்னா சேவியரின் பின்னணி இசை கதையை நகர்த்த உதவியிருக்கிறது. குடியின் தீமையை பற்றி சொல்வதற்காக எழுதி இயக்கிய சி.பிரபு ராம், படத்தை நாடக பாணியில் நகர்த்தி இருப்பது மைனஸ். படம் முழுக்க குடித்துக்கொண்டே இருப்பதும், கடன் கொடுத்தவர் அத்துமீறுவதை யாரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் நெருடுகிறது.
