Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

விமர்சனம்: ஏன் என்னை ஏதோ செய்தாய்

தாயை இழந்து, தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தவர் ஆண்டனி. அவருக்கு நண்பர்கள்தான் உலகம். குடிப்பழக்கத்துக்கு ஆளாகி கட்டுப்பாடின்றி வாழ்ந்து வரும் அவர், மதுமிதா தாஸை சந்திக்கிறார். இதனால், இருண்டு கிடந்த அவரது வாழ்க்கையில் வெளிச்சம் நுழைகிறது. ஆனால், ஆண்டனியின் விபரீத குணத்தால் மதுமிதா தாஸுடனான நட்பும், காதலும் முறிகிறது. ஒருகட்டத்தில் மனம் திருந்திய ஆண்டனி, மீண்டும் மதுமிதா தாஸை சந்திக்கிறார். அப்போது நடக்கும் எதிர்பாராத சம்பவம் இருவரது வாழ்க்கையையும் திசை மாற்றுகிறது. அது என்ன என்பது மீதி கதை.

கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, படத்தொகுப்பு ஆகிய பணிகளை திறம்பட ஏற்று, கதையின் நாயகான இயல்பாக நடித்திருக்கும் டி.அந்தோணி, பாசத்துக்காக ஏங்குவது உருக வைக்கிறது. அருவெறுப்பான வார்த்தைகளை மதுமிதா தாஸுக்கு அவர் கற்றுக்கொடுப்பது தேவையில்லாத காட்சி. பெங்காலி நடிகை மதுமிதா தாஸ், தோற்றத்தில் நமீதா சாயலில் இருக்கிறார். இயல்பாக நடித்துள்ளார். ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஜெய்கர் ஹரிநாத், அசோக் தரன் இசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஜோயி ரிடாவின் பின்னணி இசை, கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவும், கே.கே.சுரேந்திரனின் கலை இயக்கமும் நேர்த்தி. அழுத்தமான காதல் கதையை மேலோட்டமாக, அதுவும் இரண்டரை மணி நேரம் இழுவையாக சொல்லியிருப்பது நெருடுகிறது.