Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

11 வேடங்களில் யோகி பாபு

தமிழ் படவுலகில் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், இதுவரை 299 படங்களில் நடித்துள்ளார். யோகி பாபுவின் 300வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் 11 வெவ்வேறு வேடங்களில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தை, அறிமுக இயக்குனர் ஆர்.கிஷோர் குமார் இயக்குகிறார். இவர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். 9 லைட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மேலும், யோகி பாபு இப்படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் நடிக்கிறார். பான் இந்தியா அளவில் வெளியாகவுள்ள இப்படம் காமெடி, ஆக்சன் கதைகளத்துடன் உருவாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய இயக்குனர் கிஷோர் குமார், ‘பரபரப்பான காமெடி, ஆக்சன் திரில்லர் படமான இதில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 வேடங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.