Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வெறும் 19 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்; வசூலோ ரூ.20 கோடி: தலை சுற்ற வைத்த சீனா படம் - தாய், மகனின் அபார சாதனை

பெய்ஜிங்: சமூக ஊடகங்களில் ‘2026-ஆம் ஆண்டின் மிக மோசமான திரைப்படம்’ என்று விமர்சிக்கப்பட்ட ‘நியூ லாய்’ (Niu Lai) என்ற புதிய சீன அனிமேஷன் படம், தற்போது பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியான இத்திரைப்படம், அந்நாட்டின் டிக்கெட் முன்பதிவு தளமான ‘மாவோயன்’ தகவல்படி, இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இத்திரைப்படம், தன் தாயின் அரவணைப்பிலும் மந்தையின் பாதுகாப்பிலும் வாழும் ஒரு புதுக்குட்டி கன்றின் கதையைக் கூறுகிறது. படத்தின் அனிமேஷன் மிகவும் எளிமையான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அசையாத கதாபாத்திரங்கள் மற்றும் மிகவும் விசித்திரமான வசனங்களைக் கொண்டுள்ளதால், திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களைக் கதையோடு ஒன்றிணைய முடியாமல் குழப்பமடையச் செய்தது.

இந்த தரம் குறைந்த அனிமேஷன் பாணி படம் சமூக ஊடகங்களில் கடுமையான மீம்ஸ்களாக மாறி கேலிக்குள்ளாக்கப்பட்டது. பலர் இதை ‘ஒரு சுமாரான கல்லூரி மாணவனின் ப்ராஜெக்ட்’ என்றும், ‘ஏஐ தொழில்நுட்பத்தை விடவும் மோசமானது’ என்றும் விமர்சித்தனர். ஆனால், இந்த எதிர்மறை விளம்பரமே படத்திற்கு சாதகமாக அமைந்தது. சீன பாக்ஸ் ஆபீஸில் பெரிய படங்களுக்கு இணையாக இதை நிலைநிறுத்தியுள்ளது.

வெறும் 200 டாலர் (ரூ.19,000) பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 86 நிமிடத் திரைப்படம், தொடக்கத்தில் மந்தமான வரவேற்பைப் பெற்றாலும், சமூக ஊடகங்களில் வைரலான பிறகு நல்ல வசூலைப் பெறத் தொடங்கியது. ஏஐ மூலம் உருவாக்கப்படாமல், மனித உழைப்பால் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதை ஒரு தரப்பு பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இத்திரைப்படத்தை ஜின் யுமெங் மற்றும் சுன் லிஃபாங் என்ற தாய்-மகன் கூட்டணி ஐந்து ஆண்டுகள் கடின உழைப்பில் உருவாக்கியுள்ளனர். இவர்களே இப்படத்தின் கதை, இயக்கம் மற்றும் பின்னணிக் குரல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். எந்தவொரு டிரெய்லர் அல்லது விளம்பரம் இல்லாமல் வெளியான இப்படத்திற்கு, விளம்பரத்திற்காக மை ஓவியம் (ink wash painting) முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய போஸ்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.