ஐதராபாத்: இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானியின் மகனும், இந்தி நடிகருமான ஜாக்கி பக்னானியை காதல் திருமணம் செய்துகொண்டார். எனினும், தொடர்ந்து அவர் திரைப்படங்கள், வெப்தொடர்கள், சர்வதேச விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் திரைப்படங்களை படமாக்குதல் மற்றும் சர்வதேச விநியோக உரிமை என்ற போர்வையில், இந்தியாவில் இருந்து பெருமளவிலான முதலீட்டு நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக, அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. திரைப்பட தயாரிப்பு செலவுகளை போலியாக கணக்கு காட்டி, அரசு விதிகளையும் மற்றும் வரி சட்டங்களையும் மீறி பணப்பரிவர்த்தனை மோசடிகள் அரங்கேற்றப்பட்டதாக, வருமான வரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த முறைகேடு புகார்களின் அடிப்படையில், மும்பை மாநகரில் ரகுல் பிரீத் சிங் தொடர்புடைய 12 முக்கிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை தொடங்கினர். இந்த சோதனை ரகுல் பிரீத் சிங், அவரது மாமனாரும் மற்றும் பூஜா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனருமான வாசு பக்னானி மற்றும் ‘திரிஷ்யம்’ போன்ற படங்களை தயாரித்த பனோரமா ஸ்டுடியோஸ் ஆகியோருக்கு சொந்தமான வளாகங்களில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது.
அதிகாரிகளின் தனிப்படையினர் அங்குள்ள வெளிநாட்டு வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கம்ப்யூட்டர் பதிவுகள் மற்றும் நிதி தொடர்பான கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து வருவதால், இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
