Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாய் தன்ஷிகாவுக்கு கடமைப்பட்ட விஷால்

விஷால் இயக்குனராக அறிமுகமாகி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. முதல்முறையாக 3 வித்தியாசமான வேடத்தில் விஷால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, துஷாரா விஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் விஷால் பேசுகையில், ‘நான் இந்த இடத்தில் இத்தனை பாசிட்டிவாக நிற்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்த என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எல்லோருக்கும் இக்கட்டான சூழ்நிலை வரும். நானும் 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கி இருந்தேன்.

ஒரு வருடம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்து இருந்தது. இந்த சூழலில், ஆர்.பி.சவுத்ரி என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகக்கூடாது என்ற என் உழைப்பின் பலனே தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கும் இந்த படம். ஈகோ இல்லாத எனது தொழில்நுட்ப கலைஞர்களால் தான் ‘மகுடம்’ வெற்றிகரமாக வந்துள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படம் இது. அவர்கள் அறிமுகப்படுத்தும் 45வது புதுமுக இயக்குனர் நான். என் குருநாதர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தான் என்னை நடிக்க சொன்னார். மற்றும் இயக்குனர் பாலா, சுந்தர்.சி ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை இதில் செயல்படுத்தி இருக்கிறேன். படத்தின் கடைசி 8 நிமிடங்கள் மேஜிக்காக இருக்கும். இளையராஜாவின் பெரிய ரசிகன் நான். அவர் பாடல்களை படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். வெற்றி விழாவில் இன்னும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது திமிர் இல்லை. ரசிகனாக அமர்ந்து பல படங்களை பார்த்திருப்பதால், அந்த ரசனை தெரிந்திருப்பதால் உண்டான நம்பிக்கை’ என்றார்.