லண்டன் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார், விமல். அவரது உயர் அதிகாரி ஸ்ரேயா சரண் ஒரு சண்டக்காரி. அதாவது, வேலையில் அவ்வளவு கறார் பேர்வழி. ஸ்ரேயா சரணை பழிதீர்க்க விமல் ஒரு வியூகம் வகுக்க, என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ஷங்கர் உதவியாளர் ஆர்.மாதேஷ் இயக்கியுள்ளார். விமல் வழக்கமான தனது டிரேட் மார்க் நடிப்பை வழங்கி, காமெடி ஏரியாவையும் தன்வசமாக்கிக் கொள்கிறார்.
டெரர் உயர் அதிகாரி கேரக்டருக்கு ஸ்ரேயா சரண் பொருத்தமாக இருக்கிறார். அவருக்கும், விமலுக்குமான லவ் கெமிஸ்ட்ரி சுவாரஸ்யமாக இருக்கிறது. சத்யன், கிரேன் மனோகர் காமெடி நன்கு ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. விமலுடன் சேர்ந்து சிரிக்க வைத்துள்ளனர். கே.ஆர்.விஜயா, பிரபு, ‘புன்னகை பூ’ கீதா, ரேகா ஆகியோருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வடிவேல் பாலாஜியும் நடித்துள்ளார்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் அம்ரீஷ் அதகளம் செய்திருக்கிறார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார். படத்தொகுப்பு, கலை இயக்கம் போன்ற பணிகளும் பாராட்டத்தக்கவை. சிரிக்கவும், மீண்டும் ஜாலியாக சிரிக்கவும், கமர்ஷியலான ஒரு பொழுதுபோக்கு படத்தை இயக்கியுள்ளார் ஆர்.மாதேஷ்.
