Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சசிகுமாரின் ‘தெய்வா’ பாடல்

பிரைம் வீடியோ, டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’யில் இருந்து ‘தெய்வா’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். சைமன் கே.கிங் இசை அமைத்துள்ள இப்பாடலை சைமன் கே.கிங், யஷ்வந்த் இணைந்து பாட, மணி ரோமியோ எழுதியுள்ளார். மதுரையின் செழுமையான கலாச்சார பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல் மிகுந்த சூழலையும் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இத்தொடரில், நேர்மையான காவல் அதிகாரி எஸ்.ஐ மூசா ரஸா என்ற கேரக்டரில் சசிகுமார் நடித்துள்ளார். நெடுஞ்சாலை திட்டத்துக்கான தொடக்க விழாவில் தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டின் மர்மத்தை பற்றி அவர் விசாரிக்கிறார்.

பிறகு அந்த விசாரணை, மணி என்ற மர்மமான கைதியை நோக்கி செல்ல, வதந்திகள் மற்றும் ஏமாற்றங்கள், புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஆபத்தான வலையில் சிக்கிக்கொள்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜூன் நந்தகுமார் நடித்துள்ளனர். 8 எபிசோடுகளும் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் பிரைம் வீடியோவில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகிறது.