Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சாத்தான் தி டார்க் விமர்சனம்

கிழக்கிந்திய கம்பெனி காலத்தில், அஸ்தினாபுரம் கிராமத்தில் ஒரு மாந்திரீக சடங்கில் தவறு ஏற்படுகிறது. அந்த தவறு, தலைமுறை தலைமுறையாக தொடரும் கொடிய சாபத்தை ஊர் மக்கள் மீது ஏவுகிறது. அந்த கிராமத்துக்கு வரும் இளைஞன், எப்படி தீயசக்தியிடம் சிக்கினான்? அந்த சாபத்தில் இருந்து தனது காதலியை காப்பாற்றினானா? ஊர் மக்கள் மீண்டார்களா என்பது, 2ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ள எதிர்பாராத கிளைமாக்ஸ்.

அமானுஷ்ய சக்தியை எதிர்க்கும் ஃபிரெட்ரிக் ஜான், பதற்றத்தை வெளிப்படுத்தி நடிப்பில் மிரட்டியுள்ளார். திகில் சம்பவங்களால் பயந்து நடுங்கி, அம்மா மோனோ பெட்ராவின் மாறுபட்ட நடவடிக்கைகளால் மிரண்டு, தங்கையை காப்பாற்ற துடிக்கும் காட்சிகளில் ஐரா அட்டகாசமாக நடித்துள்ளார். கடவுள் பக்தியுள்ளவராக வந்து, கணவனை காப்பாற்ற முடியாமல் தவித்து, சாத்தான் முன்பு தனது நாக்கை அறுத்துக்கொள்ளும் காட்சியில் சாந்தினி தமிழரசன் அசத்தியுள்ளார்.

எட்வர்ட், ஸ்ரீஜா ரவி உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டரில் நேர்த்தியாக நடித்துள்ளனர். மர்மங்களும், திகிலும் கலந்த உளவியல் ரீதியான பேய் கதையை, மாறுபட்ட திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால், இதயம் நடுங்கும் வகையில் எழுதி இயக்கியுள்ள மணிகண்டன் ராமலிங்கம், பீரியட் கதை ஒன்றை இன்றைய சம்பவங்களுடன் இணைத்து சொல்லியிருக்கும் பாணி அசத்தல்.

ஒலிப்பதிவு ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிறது. திகில் கதைக்குரிய அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை மனதை உலுக்கியெடுத்து விடுகிறது. அடர்ந்த காட்டில், இரவு நேரங்களில் பாலா ஜி.ராமசாமியின் கேமரா அமானுஷ்யத்தை பதிவு செய்துள்ளது. பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் கதையோட்டத்துக்கு ஸ்பீடு பிரேக்கராக இருக்கிறது.