Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்...

தனக்கென்று யாரும் இல்லாத ஜெய், ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். அமைச்சரின் மகள் என்று தெரியாமலேயே மீனாட்சி கோவிந்தராஜனை ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றி, பிறகு அவரை காதல் திருமணம் செய்கிறார். இருவரும் கொடைக்கானல் ரிசார்ட்டில் ஹனிமூன் கொண்டாடுகின்றனர். ரிசார்ட் உரிமையாளர் கருடா ராம், தம்பதிகளை மறைமுகமாக வீடியோ எடுத்து வெளிநாட்டு ஏஜெண்டுக்கு விற்பதை அறிந்து பதறும் ஜெய், ஒரு ஜோடியை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கும், மீனாட்சி கோவிந்தராஜனுக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டு பிரிகின்றனர். அமைச்சர் தனது மகளை வலைவீசி தேடுகிறார். சொத்துகளுக்காக மீனாட்சி கோவிந்தராஜனை திருமணம் செய்ய அவரது நண்பர் முயற்சிக்கிறார். இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கும் ஜெய், இறுதியில் என்ன செய்தார் என்பது மீதி கதை. காதல், பாசம், ஆக்ரோஷம், அடிதடி, சென்டிமெண்ட் என்று, அனைத்து ஏரியாவிலும் ஜெய் ஜெயித்திருக்கிறார்.

அவருக்கு ஈடுகொடுத்து நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன், பெட்ரூம் காட்சிகளில் அதிக நெருக்கத்தை காட்டி ரசிகர்களை சூடேற்றுகிறார். வழக்கமான வில்லன்களாக கருடா ராம், அஜய் வருகின்றனர். யோகி பாபு, ஆதித்யா கதிர், சத்யன் காமெடி சிரிக்க வைக்கிறது. சரவண சுப்பையா வந்து செல்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்கேற்ற பாடல்களையும், பின்னணி இசையையும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு காட்சிகளை நகர்த்த உதவியுள்ளது. ஆங்காங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய காதல் கதையை பாபு விஜய் எழுதி இயக்கியுள்ளார். விறுவிறுப்பை அதிகரித்து இருக்கலாம்.