மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள ‘துரோகம் பழகு’ என்ற படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் படவுலகில் திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்கு சென்ற சில மீனவர்கள், ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.
கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்நிகழ்ச்சி, மிகவும் வித்தியாசமான முயற்சியாக இருந்தது. இதில் தக்ஷன் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், வனிதா விஜயகுமார், ஜீவா தங்கவேல், அமுதவாணன், அப்புக்குட்டி, திவாகர், கஞ்சா கருப்பு நடித்துள்ளனர். சீயோன் ராஜா எழுதி இயக்கியுள்ளார். ராஜா, பாலா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, விரைவில் மிகப் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.
