Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடிகர், இயக்குனர்: சோனாலி குல்கர்னி குற்றச்சாட்டு

மும்பை: பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர், சோனாலி குல்கர்னி (50). சிறந்த நடிப்புக்காக தேசிய விருது உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். தமிழில் கடந்த 1994ல் வெளியான ‘மே மாதம்’ என்ற படத்தில் நடித்திருந்த அவர், இதில் இடம்பெற்ற ‘மார்கழி பூவே’ என்ற பாடலின் மூலம் இன்றும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில், திரையுலகில் ஆரம்பகாலத்தில் தனக்கு நேர்ந்த சில அதிர்ச்சிகரமான, கசப்பான அனுபவங்களை ஒரு பேட்டியில் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.

ஒரு படப்பிடிப்பில் பாலியல் வக்கிர எண்ணத்துடன் எல்லைமீறி தன்னை தவறான முறையில் தொட்ட நடிகரை, அப்போதே நேருக்கு நேர் கண்டித்ததாக குறிப்பிட்ட சோனாலி குல்கர்னி, ‘அங்கிள், இன்று நீங்கள் செய்வது மிகவும் அசிங்கமான ஒரு செயல். இதுபோன்ற அநாகரீகமான காரியங்களில் நாம் ஈடுபடக்கூடாது’ என்று சொல்லி, அவரை கடுமையாக எச்சரித்ததாகவும், இதனால் பயந்த அந்த நடிகர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கு கதை சொல்வதற்காக, தன்னை தங்களது வீட்டுக்கு புடவை அணிந்து வரவழைத்து, பிறகு தனி அறைக்குள் வர வேண்டும் என்று ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் விபரீத நிபந்தனை விதித்தபோது, அவர்களின் கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்டு, அந்த வாய்ப்பை உதறிவிட்டு, அங்கிருந்து துணிச்சலுடன் வெளியேறியதாகவும் சோனாலி குல்கர்னி தெரிவித்துள்ளார்.