மும்பை: மிகவும் பணக்கார பாலிவுட் நடிகரான’ ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு ஓராண்டில் ரூ. 2,500 கோடி குறைந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலமும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ்’ (ஐபிஎல் கேகேஆர் அணி) உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டில் ஷாருக்கானின் மொத்த நிகர சொத்து மதிப்பு ரூ.2,490 கோடி குறைந்துள்ளது என்பது தெரியவருகிறது. ‘ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026’ அறிக்கையின்படி, கடந்த 2025ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 2026ல் அது ரூ.10,000 கோடியாக குறைந்துள்ளது. அவரது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் வணிக மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சொத்து மதிப்பில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்ட போதிலும், ஷாருக் கான் இந்தியாவின் பணக்கார நடிகராக தொடர்ந்து நீடிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, ரூ.4,000 கோடி சொத்து மதிப்புடன் அமிதாப் பச்சன் உள்ளார். ரூ.3,000 கோடி சொத்து மதிப்புடன் சல்மான் கான் 3வது இடத்தில் உள்ளார். ரூ.2,500 கோடி சொத்து மதிப்புடன் ஹிரித்திக் ரோஷன் அடுத்த இடத்தில் உள்ளார்.பணக்கார நடிகைகள் பட்டியலில், ஜூஹி சாவ்லா ரூ.7,790 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சினிமா மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, ஐபிஎல் கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பங்குகள், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் (பங்குதாரராக) மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலமாகவே இவருக்கு இவ்வளவு பிரம்மாண்ட சொத்து மதிப்பு உள்ளது. ஜஸ்வர்யாராய் பச்சன் 860-900 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 650-850 கோடியுடன் 3வது இடத்திலும், அலியாபட் ரூ.550-892 கோடி, கரீனா கபூர் ரூ.485-500 கோடியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
