Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஷூட் த குருவி (தமிழ்)

வாழ்நாள் முழுக்க சிகரெட்டை ஊதித்தள்ளிய இளைஞனுக்கு நுரையீரல் கெட்டு, ஆயுளுக்கு கெடு விதிக்கிறது மருத்துவத்துறை. தான் சாவதற்குள் விரும்பியதைச் செய்ய நினைக்கிறான். அதில் அவன் பட்டியலிட்டதில் ஒன்று, பார்த்தவுடன் அடிக்கத்தோன்றும் ஒருவனை செமத்தியாக அடித்துவிடுவது. அப்படி அடிக்கவும் செய்கிறான். அடி வாங்கியது, ஊரையே கலக்கும் தாதா குருவிராஜன். தன்னை அடித்தவனை தாதா வலைவீசி தேட, உடனே நண்பனிடம் அடைக்கலமாகிறான் அந்த இளைஞன். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

டார்க் காமெடி ஜானரில் புதியவர்கள் இணைந்து கொடுத்துள்ள படம் இது. தாதா குருவிராஜனாக அர்ஜய், சஸ்பென்ஸ் கேரக்டரில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், சாவு நெருங்கும் இளைஞனாக ஆஷிக் ஹூசைன், அவருக்கு அடைக்கலம் கொடுப்பவராக சாரா நடித்துள்ளனர். சிரத்தை எடுத்து சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார், இயக்குனர் மதிவாணன். அதில் பாதி கிணறு தாண்டியும் இருக்கிறார். சரியான கதை, நேர்த்தியான திரைக்கதை போன்றவற்றை மனதில் கொண்டு பொழுதுபோக்கு படம் தந்திருக்கிறார். வசனத்தை கேட்கவிடாமல் செய்யும் மூன்ராக்சின் பின்னணி இசை, செம இரைச்சல். பெர்னாடன் சுஷாந்தின் ஒளிப்பதிவு பரவாயில்லை. ஜனரஞ்சக அம்சங்களுடன் ஒரு படத்தை தந்துள்ளனர். இது ஷார்ட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.