கொடைக்கானல் சூசைட் பாயின்ட் அருகிலுள்ள ரிசார்ட்டில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் காதல் ஜோடி அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி தங்குகின்றனர். திருமண போட்டோஷூட்டுக்காக வந்த இடத்தில், திடீரென்று எனாக்ஷி கங்குலி மாயமாகிறார். அங்குள்ள காவல் நிலையத்தில், தனது காதலி காணவில்லை என்று அருண் கார்த்தி புகார் கொடுக்கிறார். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரிக்கும்போது, திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
அது என்ன? உண்மையிலேயே அருண் கார்த்தியின் காதலி இருந்தாரா என்பது, மர்மம் கலந்த எதிர்பாராத கிளைமாக்ஸ். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை கதைக்குள் சாமர்த்தியமாக புகுத்தி, இயல்பான கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் படத்தை விறுவிறுப்பாக எழுதி இயக்கிய புதியவர் செ.ரா.ராஜேஷ் பாராட்டுக்குரியவர். காதலர்களாக அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி யதார்த்தமாக நடித்துள்ளனர்.
அவர்களின் நெருக்கம், கொடைக்கானல் குளிருக்கு இதமாக இருக்கிறது. கிளைமாக்ஸில் அருண் கார்த்தியின் நடிப்பு உருக வைக்கிறது. சேரன் ராஜ் இன்னும் எத்தனை படங்களில் போலீஸ் வேடத்தில் நடிப்பார் என்று தெரியவில்லை. மற்றும் கஜராஜ், கருப்பு நம்பியார், சரணவ சக்தி, ‘உறியடி’ சுருளி, செ.ரா.ராஜேஷ், உமர், வினோத் ஆகியோர், இயல்பாக நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர்.
பகல் நேர ஜாலியான கொடைக்கானலையும், இரவு நேர அமானுஷ்யமான குளிர்ந்த கொடைக்கானலையும் ஜெயகுமார் தங்கவேலின் கேமரா நேர்த்தியாக படமாக்கியுள்ளது. சதா முருகனின் பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சதா முருகன், சந்தோஷ் ஆறுமுகம் எழுதிய பாடல்கள் கதைக்கேற்ப இருக்கின்றன. எம்.எஸ்.செல்வா, சி.ஆர்.புவனேஷ் ஆகியோரின் எடிட்டிங் கச்சிதம். சஸ்பென்ஸ் திரில்லர் பிரியர்களுக்கான படத்தை செ.ரா.ராஜேஷ் வழங்கியுள்ளார். காட்சிகள் மெதுவாக நகர்வது மைனஸ்.
