ஐதராபாத், அக்.28: பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் டி.வி அரட்டை நிகழ்ச்சியில், நட்சத்திர காதல் தம்பதி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டனர். அப்போது தங்கள் காதல் விவகாரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, விமான நிலையத்தில் வைத்து விஜய் தேவரகொண்டாவிடம் திருமணம் செய்துகொள்ள தான் கேட்டதாகவும், அதற்கு அவர் 100 முறை தன்னிடம் கேட்கும்படி சொன்னதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா தனது மனைவியை அவமரியாதை செய்ததாக சொல்லி, சமூக வலைத்தளங்களில் சிலர் எல்லை மீறி விமர்சித்தனர். இதற்கு நேற்று முன்தினம் விளக்கம் அளித்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா தம்பதி, ‘எங்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் தேவையின்றி தலையிடுபவர்கள், தங்களுடைய கருத்துகளை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வது நல்லது’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், இணையதளங்களில் தங்களை குறிவைத்து திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும், ஆள்மாறாட்டம் செய்து போலியான பதிவுகளை உருவாக்குவதாகவும் சொல்லி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் பி.நிஷாந்த் குமார் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தார்.
