Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மரங்களுக்காக மக்களிடம் மன்றாடும் சவுந்தரராஜா

நடிகரும், சமூக ஆர்வலருமான சவுந்தரராஜா, ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுவது வழக்கம். அந்தவகையில் இந்த பிறந்தநாளிலும் மரம் நடும் நிகழ்ச்சி ஒன்றில் உற்சாகமாக கலந்துகொண்டார். அதோடு, ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பில் சமூகம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். அறக்கட்டளையின் 11வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடந்தது. சவுந்தரராஜா, துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ஆர்.செந்தில்குமார், தரமணி காவல் ஆய்வாளர் ஜி.முருகேசன், தரமணி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி டி.சிவகலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சவுந்தரராஜா, அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு மரம் நட வேண்டும் என்றும், நேரம் கிடைக்கும்போதோ அல்லது வார இறுதி நாட்களிலோ திட்டமிட்டு, 10 மரங்களையாவது நட வேண்டும். மரம் நட முடியாத நிலையில், வளரும் மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அறக்கட்டளை சார்பில், நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு, நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும், ரொக்கப் பரிசுகளையும் வழங்கி கவுரவித்து வருகிறார். இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கினார்.