Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்டுடியோவில் இயக்குனர் அத்துமீறல்: பாடகி சுனிதா சாரதி பகீர்

சென்னை: தமிழில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இனி நானும் நானில்லை’ பாடலின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சுனிதா சாரதி. அந்த படத்தை தொடர்ந்து ‘காக்கா காக்கா’ படத்தில் ‘தூது வருமா’, ‘ஆய்த எழுத்து’ படத்தில் ‘ஹே குட்பை நண்பா’, ‘ஐ’ படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ உள்பட பல தமிழ் பாடல்களை பாடினார். தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் எண்ணற்ற மாபெரும் வெற்றி பாடல்களை பாடி, தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்து பேசி திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், ‘‘அது ஒரு மிகவும் செக்ஸியான பாடல். நான் பாட சென்றபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இருந்தார்கள், ஒரு பெண்கள்கூட இல்லை. அப்போது அந்தப் படத்தின் இயக்குனர் என்னிடம் வந்து, கொஞ்சம் மூட் (Mood)-ஆ பாடுங்க என்று சொன்னார். இசையமைப்பாளர் அதை சொல்லவில்லை, இயக்குனர் தான் அப்படி பாட சொன்னார். உடனே நான் கடும் கோபமானேன். அவரது முகத்திற்கு நேராகவே எனக்கெல்லாம் மூடா பாட வராது என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டேன். உடனே அவர் அதிர்ச்சியாகி, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க? என்று கேட்டார்’’.

அந்த பாடல் எதுவென்று வெளிப்படையாகச் சொல்ல விரும்பாத சுனிதா சாரதி, ‘‘சினிமா துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் அருவருப்பானதாக இருக்கிறது. ஸ்டுடியோவில் ‘மூடா பாடுங்க’, ‘கொஞ்சம் பைட் பண்ணி பாடுங்க’ என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, பாடகர்களுக்கு அருவருப்பாகவும், மிகுந்த சங்கடமாகவும் தான் இருக்கும். அவர்கள் அப்படி பேசும்போது டென்ஷாகிவிடும். பாடல் பாடுவதை விட, எப்போது இந்த இடத்தை விட்டு வெளியே போவோம் என்ற எண்ணம் தான் இருக்கும். பாடகர்களிடம் இதுபோன்ற மலிவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, டீசன்ட் வார்த்தைகளை தெளிவாகவும் மரியாதையாகவும் பயன்படுத்தலாம். ‘மூடா பாடுங்க’ என்று சொல்வதெல்லாம் ஒரு பாடலைப் பாடுவதற்கான சரியான இசை வழிகாட்டலே கிடையாது’’ என பாடகி சுனிதா சாரதி பேசிய இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.